பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்று கவட்டைப்படை எனும் டினியா குரூரிஸ் - Tinea Cruris
பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்று (கவட்டைப்படை) என்பது ஒரு பூஞ்சையால் கால் கவட்டையில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்று ஆகும். இது, வழக்கமாக ஒரு பூஞ்சை எதிர்ப்பு கிரீமை பூசுவதன் மூலம் குணமாகும். இது, திரும்பத்திரும்ப ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் உதவும்.
பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்று (கவட்டைப்படை) என்றால் என்ன மற்றும் இது உங்களுக்கு எப்படி ஏற்படுகிறது?

பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்று (கவட்டைப்படை) என்பது கால் கவட்டையில், பூஞ்சையால் உருவாகும் ஒரு நோய்த்தொற்று ஆகும். மனிதத் தோலில் சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் (பூஞ்சை) பொதுவாகக் காணப்படுகின்றன. இவை, வழக்கமாகத் தீங்கு எதுவும் விளைவிப்பதில்லை. எனினும், நிலைமைகள் அவற்றுக்குச் சாதகமாக இருந்தால், அவை தோலுக்குள் 'ஊடுருவி', இனப்பெருக்கம் செய்து நோய்த்தொற்றை உண்டாக்கும். கால் கவட்டை போன்ற, தோலின் வெதுவெதுப்பான, ஈரப்பதமான மற்றும் காற்று இல்லாத பகுதிகள் பூஞ்சைக்குச் சாதகமான நிலைமைகளைக் கொண்டுள்ளன.
பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்றின் (கவட்டைப்படை) அறிகுறிகள் யாவை?
வழக்கமாக, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். முக்கியமாக, காலின் உச்சிக்கும் பிறப்புறுப்புப் பகுதிக்கும் இடையே ஏற்படும். இது, ஆண்களிடத்தில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. விதைப்பையிலும் அரிப்பு ஏற்படலாம். அதன் பிறகு கால் கவட்டையில் ஒரு சிவப்பு நிறச் சொறி, வழக்கமாக ஒரு வரையறையுள்ள விளிம்புடன் அல்லது எல்லையுடன் உருவாகிறது. பொதுவாக, இரண்டு கால் கவட்டைகளும் பாதிக்கப்படுகின்றன. சொறி பெரும்பாலும் ஒரு குறுகிய தூரத்திற்கு இரண்டு தொடைகளின் உள்பக்கமாகக் கீழ் நோக்கி பரவுகிறது.
சில நேரங்களில், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கு நோய்த்தொற்றுப் பரவுகிறது (அல்லது athlete's foot (சேற்றுப்புண்) போல உடலின் மற்ற பகுதிகளில் முதலில் உருவாகியிருக்கலாம்). பூஞ்சை நோய்த்தொற்றுகள் வழக்கமாகத் தோலைத் தாண்டி உடலுக்கு உள்ளே ஆழமாகச் செல்வதில்லை மற்றும் வழக்கமாகக் கடுமையானதல்ல.
பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்றுக்கான (கவட்டைப்படை) சிகிச்சைகள் யாவை?
நீங்கள் மருந்தகங்களில் இருந்து ஒரு antifungal (ஆண்டி ஃபங்கல்) கிரீமை விலைக்கு வாங்கலாம் அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துச்சீட்டில் உள்ள மருந்தை வாங்கலாம். பல்வேறு வகையான பிராண்டுகள் உள்ளன - உதாரணத்திற்கு, terbinafine (டெர்பினாஃபின்), clotrimazole (க்ளோட்ரிமஸோல்), econazole (எகோனஸோல்), ketoconazole (கீட்டோகோனஸோல்) மற்றும் miconazole (மிக்கோனஸோல்). இந்த நவீன கிரீம்கள் பூஞ்சையால் உருவாகும் நோய்த்தொற்றுகளை அழித்தொழிப்பதில் சிறந்தவையாகும்.
- சொறியுள்ள இடத்தில் மட்டுமல்லாமல் சொறியைச் சுற்றிலும் 4-6 செ.மீ. பரப்பளவுக்குச் சாதாரணத் தோலிலும் கிரீமை பூசுங்கள்.
- அறிவுறுத்தப்பட்டுள்ள காலம் வரையிலும் கிரீமை பூசுங்கள். இந்தக் கால அளவு ஆனது கிரீம்களைப் பொறுத்து மாறுபடும், எனவே அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசியுங்கள்.
- அதிலும் குறிப்பாக, அழற்சி உண்டான தோலுக்கு, உங்கள் மருத்துவர் ஒரு பூஞ்சை எதிர்ப்புக் கிரீமுடன் சேர்த்து ஒரு மிதமான ஸ்டீராய்டு கிரீமையும் பரிந்துரைக்கலாம். இது, வழக்கமாக ஏழு நாட்களை விட அதிகமாக இல்லாத கால அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு, ஒரு பூஞ்சை எதிர்ப்புக் கிரீமை மட்டுமே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கும். ஸ்டீராய்டு ஆனது அழற்சியை மட்டுமல்லாமல் அரிப்பையும் செந்நிறத்தையும் விரைவாக குறைக்கிறது. எனினும், ஸ்டீராய்டு ஆனது பூஞ்சையைக் கொல்வதில்லை என்பதால் ஸ்டீராய்டு கிரீமை மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
நோய்த்தொற்றுப் பரவியிருந்தால் அல்லது கடுமையாக இருந்தால், வாய்வழியாக எடுக்கப்படும் ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்து சில நேரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, terbinafine (டெர்பினாஃபின்), griseofulvin (கிரிஸோபியூல்வின்) அல்லது itraconazole (இட்ராகோனஸோல்) மாத்திரைகள்.
பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்று (கவட்டைப்படை) மீண்டும் ஏற்படுவதைப் பின்வரும் உதவிக்குறிப்புகள் மூலம் தடுக்கலாம்
- உங்கள் கால் கவட்டையைத் தினமும் கழுவுங்கள்; அதன் பிறகு முழுமையாக உலரவையுங்கள். உண்மையில் சொல்லப்போனால், உலர வைப்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். உங்கள் கால் கவட்டை முழுமையாக உலர்வதற்கு முன்னதாக உள்ளாடையை அணியக்கூடாது. அப்படி அணிந்தால், ஈரக்கசிவுள்ள கால் கவட்டையில் பூஞ்சைக் கிருமிகள் (பூஞ்சை) அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்துவிடும். (உங்கள் கால் கவட்டையில் அதிக முடி இருந்தால் ஒரு ஹேர்டிரையரை (hairdryer) பயன்படுத்துங்கள்).
- உள்ளாடையைத் தினமும் மாற்றுங்கள். அழுக்கான உள்ளாடையை அணிந்தால் தோலின் செதில்களில் பூஞ்சை அதிவிரைவாக இனப்பெருக்கம் செய்யும்.
- உங்களுக்குச் சேற்றுப்புண் இருக்கிறதா எனச் சரிபாருங்கள், இருந்தால் அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். சேற்றுப்புண் என்பது கால்விரல்களில் உண்டாகும் ஒரு பொதுவான பூஞ்சை நோய்த்தொற்று ஆகும். சேற்றுப்புண் உண்டானால் வழக்கமாக, கால்விரல்களுக்கு இடையேயான தோல் அரிக்கும் மற்றும் செதில்களாக உதிரும் அதிலும் குறிப்பாக வெளிப்புற இரண்டு கால்விரல்களுக்கு இடையே இவ்வாறு ஏற்படும். சேற்றுப்புண்ணில் இருந்து பூஞ்சையானது கால் கவட்டைக்குப் பரவலாம். சேற்றுப்புண்ணுக்கும் பூஞ்சை கால் கவட்டை நோய்த்தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு ஒரே மாதிரியான கிரீம்களே பயன்படுத்தப்படுகின்றன.
- பொது இடங்களில் உள்ள உடை மாற்றும் அறைகளில் மற்றவர்களின் டவல்களைப் பயன்படுத்தக்கூடாது. டவல்களை அடிக்கடி துவைக்க வேண்டும்.
- உங்களுக்கு ஒரு பூஞ்சை தோல் நோய்த்தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கு உங்கள் சொந்த பயன்பாட்டுக்கு எனத் தனியாக ஒரு டவலை வைத்துக் கொள்ளுங்கள்.
பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.
Further reading and references
Fungal skin infection - body and groin; NICE CKS, September 2014 (UK access only)
Fungal skin infections; DermNet NZ